என் தமிழ்

நேபாள வெள்ளப் பேரழிவு : ஒரு மாதம் கடந்தும் 5,285 பேர் மாயம்

நேபாளம், 26 செப்டம்பர் 2026 : 26 செப்டம்பர் 2026 : நேபாளத்தின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், 85 தமிழர்கள் உட்பட 5,285 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) தகவலின்படி, வெள்ளத்தில் இதுவரை 1,453 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 1,451 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் உருவான திடீர் வெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களைப் பெரிதும் பாதித்தது. போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பால்களை அடித்துச் சென்றதுடன், நீர்மின் திட்டங்களையும் சேதப்படுத்தியது.

இதுவரை 13,795 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,113 பேர் 21 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 11,000 பேருக்கு பாதுகாப்புப் படையினர் மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளனர். மேலும், ஏழு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் அதிகாரிகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட 1,453 உடல்களில் இதுவரை 112 உடல்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பல உடல்கள் மோசமாக சேதமடைந்துள்ளதால், நேபாள காவல்துறை DNA பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் எச்சங்களிலிருந்து 1,329 DNA மாதிரிகளும், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து 2,060 DNA மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

Scroll to Top