கோலாலம்பூர், 06 ஆகஸ்ட் 2026 : இந்தியாவின் International Foundation for Culture, Peace and Environment (IFCPE) அமைப்பு சார்பில் நடத்தப்படும் “இமயம் இன்டர்நேஷனல் விருதுகள் 2026” வழங்கும் விழா, வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோலாலம்பூரிலுள்ள சிக்னேச்சர் இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
கலை, கல்வி, தொழில்முனைவு, சமூகப் பணி, ஊடகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஆளுமைகளை கௌரவிக்கும் நோக்கில் இந்த சர்வதேச விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மலேசிய முன்னாள் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஏ. கோஹிலன் பிள்ளை மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி அர்வேந்த் அப்பளசாமி ஆகியோர் முதன்மை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் கருடா குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருடா சிவா, சன்ஷைன் எஜுகேஷனல் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத் மற்றும் நாராயணா டீ ஸ்டால் மலேசியாவின் நிறுவனர் சோபனா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவை IFCPE சர்வதேச தலைவர் ஆர். அருண்குமார் மற்றும் Pearlyn Ads & Events நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜனு பிரியா எலிசபெத் தலைமையில் ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்ச்சியை ஆர்.ஜே. மகேந்திரா தொகுத்து வழங்குகிறார். இந்த சர்வதேச விருது வழங்கும் விழாவில் அழைப்பிதழ் பெற்ற விருந்தினர்கள், விருது பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.









