என் தமிழ்

நஜிப்புக்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு : மாமன்னரின் முடிவை மதிக்க வேண்டும் – PPP

கோலாலம்பூர், 19 செப்டம்பர் 2026 : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் முடிவை அனைத்து தரப்பினரும் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் முன்னேற்றக் கட்சி (PPP) வலியுறுத்தியுள்ளது.

PPP தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் வெளியிட்ட அறிக்கையில், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவுக்கான 64-வது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு அரசியலமைப்பு நடைமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், அதனை அனைத்து மலேசியர்களும் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். முடிவின்படி, நஜிப் 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை தனது எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும். இதற்கு RM50 மில்லியன் அபராதத்தை செலுத்துவதுடன், விதிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் அவர் கடைப்பிடிக்க வேண்டும்.

மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பின் 42-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட லோகா பாலா மோகன், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவொரு விவாதமும் மாமன்னர் பதவிக்கும் அரசியலமைப்பு நடைமுறைக்கும் உரிய மரியாதையுடன் இடம்பெற வேண்டும் என்றார்.

மேலும், நஜிப்புக்கு வழங்கப்பட்டிருப்பது நிபந்தனை மன்னிப்பு என்பதால், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அவர் மீறினால் மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, எஞ்சிய தண்டனையை சிறையில் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்துக்காக அரசியலாக்க வேண்டாம் என்றும் லோகா பாலா மோகன் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

ஜனநாயக சமூகத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பானது என்றாலும், அவை கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொறுப்புடன் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப்பின் மன்னிப்பு கோரிக்கையை பரிசீலித்து அரசியலமைப்பு ரீதியான மன்னிப்பு வாரியத்தின் மூலம் முடிவெடுத்ததற்கு PPP சார்பில் நன்றியையும் லோகா பாலா மோகன் தெரிவித்தார்.

Scroll to Top