செகாமாட், 20 செப்டம்பர் 2026 : ஜெமந்தாவில் செகாமாட் தொகுதி சார்பில் நடைபெற்ற விளக்குத் திருவிழா (Pesta Tanglung) சிறப்பாக நடைபெற்றது. மெங் டெக் தோ தோங் கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மக்களுடன் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டார்.
சீன சமூகத்தின் முக்கியமான பாரம்பரிய விழாக்களில் ஒன்றான விளக்குத் திருவிழா, குடும்ப ஒற்றுமை மற்றும் ஒன்றுகூடலை எடுத்துக்காட்டும் வகையில் கொண்டாடப்படுகிறது. முழுநிலவு குடும்பத்தினர் ஒன்றாக கூடுவதன் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சீன சமூகத்தினர் மட்டுமின்றி, பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது மலேசியாவின் பன்முக கலாசார ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து சந்தித்து, ஒருவரின் கலாசாரத்தை மற்றொருவர் அறிந்துகொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த மெங் டெக் தோ தோங் கோவில் தலைவர் திரு. கண் சா (Mr Gan Cha), “Mr Very Good” என அன்புடன் அழைக்கப்படும் அவர் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினருக்கு யுனேஸ்வரன் ராமராஜ் நன்றி தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த உதவிய செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தைச் சேர்ந்த திரு. கண் சீ மெங் (Mr Gan Chee Meng) அவர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். “கலாசாரங்கள் வேறுபட்டிருந்தாலும், செகாமாட் அனைவருக்கும் பொதுவான இல்லமாகும்” என்ற ஒற்றுமைச் செய்தியை இந்த விழா வெளிப்படுத்தியதாக யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.







