சிங்கப்பூர், 06 ஆகஸ்ட் 2026 : மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான மனிதவள மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய மனிதவள அமைச்சின் (KESUMA) அதிகாரப்பூர்வ பணிப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள துணை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன், அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் முன்கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில், இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் எடுத்துரைக்கப்படவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், மலேசிய தொழிலாளர்களின் நலன், நாட்டின் நலன் மற்றும் நீடித்த மனிதவள மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, சிங்கப்பூரின் இடைக்கால மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவுடன் ரமணன் ராமகிருஷ்ணன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பில் தொழிலாளர் திறன் மேம்பாடு, திறமையான மனிதவள உருவாக்கம், திறனாளிகளின் இடம்பெயர்வு, மலேசிய தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் இருநாடுகளுக்கும் பயனளிக்கும் சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா–சிங்கப்பூர் உறவு, நடைமுறை சார்ந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம் மேலும் வலுப்பெற்று, இருநாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் பங்களிக்கும் என்ற நம்பிக்கையை ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






