நெகிரி செம்பிலான், 23 ஜூலை 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் டெமியாங் (Temiang) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில், நெகிரி செம்பிலானில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களுடன் இணைந்து பங்கேற்றதாகவும், குறிப்பாக N12 டெமியாங் தொகுதி வேட்பாளர் ஹோ வெங் வாவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த பாடுபட்ட கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்த அவர், N12 தொகுதி மக்களுக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றவும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றி பெறவும் பக்காத்தான் ஹராப்பான் உறுதியுடன் செயல்படும் என்றார்.
நெகிரி செம்பிலான் மக்களிடம் வலுவான ஆணையை பக்காத்தான் ஹராப்பானுக்கு வழங்குமாறு கோபிந்த் சிங் டியோ கேட்டுக்கொண்டார். டத்தோ ஸ்ரீ உத்தாமா ஹாஜி அமினுடின் ஹரூன் தலைமையிலான தூய்மையான, நிலையான மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி தொடர இந்த ஆதரவு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.






