புனே, 08 செப்டம்பர் 2026 : அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து புனேயில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் மருந்து ஆய்வாளர் பணிக்கான குரூப்-பி தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த பின்னர் வினாத்தாள் கசிந்தது தெரியவந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்வில் 7-வது இடத்தைப் பிடித்த பெண் தேர்வர் உள்பட 7 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அரசு வேலைக்கான தேர்வு செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை வலியுறுத்தி புனேயில் இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் திரண்டனர்.
பின்னர், புனே ஓம்காரேஸ்வர் கோவில் சவுக்கில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி அவர்கள் பேரணியாகச் சென்றனர். போராட்டத்தில் பங்கேற்ற தேர்வர்கள், மராட்டிய மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்களுக்குப் பதிலாக நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஸ்வஜித் கதம் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அரசுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக இளைஞர்கள் பெருமளவில் திரண்டதால் புனேயில் பரபரப்பு ஏற்பட்டது.







