கோலாலம்பூர், 08 செப்டம்பர் 2026 : மலேசியாவைச் சேர்ந்த இயக்குநர் அரங்கண்ணல் ராஜ் இயக்கிய ‘பெலாங் – தி சைலன்ட் டைகர்ஸ்’ திரைப்படம் டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வத் தேர்வில் இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமாவையும் உலகளாவிய தமிழ் கதைகளையும் கொண்டாடும் வகையில் நடைபெறும் இத்திரைப்பட விழாவில், மலேசிய திரைப்படம் இடம்பெற்றிருப்பது நாட்டின் சினிமாத்துறைக்கு பெருமைக்குரிய தருணமாக அமைந்துள்ளது.
‘தி சைலன்ட் டைகர்ஸ்’ திரைப்படம் செப்டம்பர் 25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. கனடாவின் ரிச்மண்ட் ஹில்லில் உள்ள யார்க் சினிமாஸில் திரைப்படத்தின் திரையிடல் நடைபெறும்.
மலேசியாவில் உருவான ஒரு முழுநீளத் திரைப்படம் சர்வதேச அளவில் தமிழ் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வத் தேர்வில் இடம்பெற்றிருப்பது, மலேசிய தமிழ் படைப்பாளர்களின் படைப்புகளுக்கு உலகளாவிய தளத்தில் கிடைத்து வரும் அங்கீகாரத்தை வெளிப்படுத்துகிறது.
தமிழ் சினிமாவின் பல்வேறு குரல்களையும் உலகின் பல பகுதிகளில் உருவாகும் தமிழ் கதைகளையும் ஒரே மேடையில் கொண்டுவரும் இந்த விழாவில் ‘தி சைலன்ட் டைகர்ஸ்’ இடம்பெறுவது மலேசிய சினிமா ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.








