தெஹ்ரான், 08 செப்டம்பர் 2026 : அமெரிக்கா தங்களை அச்சுறுத்துவதையும் தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தினால், ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்வோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி இதுகுறித்து கூறுகையில், அமெரிக்காவின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய தடை செய்யப்பட்ட கடல் மண்டலத்தை வரும் நாட்களில் அறிவிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் ரெசாயி தெரிவித்துள்ளார். இந்த மண்டலம் அமெரிக்க கடற்படை முற்றுகை தொடங்கும் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரானுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் புதிய கடல் மண்டலத்துக்குள் நுழையும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட கப்பல்களின் காப்பீடு மற்றும் எதிர்கால ஹார்முஸ் ஜலசந்தி பயணங்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் மற்றும் ஓமன் கடற்பகுதிகளை உள்ளடக்கிய புதிய சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்துக்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் ரெசாயி தெரிவித்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் நிலை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.







