என் தமிழ்

காமன்வெல்த் விளையாட்டு 2026 : மலேசிய வீரர்களுக்கு டாக்டர் நோர்சா ஜக்காரியா உற்சாக உரை

ஸ்காட்லாந்து, 24 ஜூலை 2026 : 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு, காமன்வெல்த் ஸ்போர்ட் மலேசியா தலைவர் டாக்டர் நோர்சா ஜக்காரியா, மலேசிய வீரர்கள் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து உற்சாகமூட்டும் உரையாற்றினார்.

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக, கிளாஸ்கோவில் உள்ள வில்லேஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மலேசிய அணியின் தலைவர் (Chef de Mission) அவாலான் அப்துல் அசீஸ், அணி அதிகாரிகள் மற்றும் லான் பவுல்ஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பாரா பவுல்ஸ், பாரா பவர் லிப்டிங் மற்றும் பாரா வீல்சேர் கூடைப்பந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

உரையாற்றிய டாக்டர் நோர்சா ஜக்காரியா, சர்வதேச அரங்கில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையுடனும் பொறுப்புடனும் கூடிய பணியாகும் என்று குறிப்பிட்டார். அணியின் ஒற்றுமை, உற்சாகம் மற்றும் போராட்ட மனப்பான்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் அணித் தலைவர் அவாலான் அப்துல் அசீஸின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

“உங்களின் திறமையை ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம். 34 மில்லியன் மலேசியர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் சுமந்து நீங்கள் களமிறங்குகிறீர்கள். தைரியமாகப் போட்டியிட்டு, கண்ணியத்துடன் போராடுங்கள்,” என்று அவர் வீரர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், “போட்டிக் களத்தில் எதிரணியைக் கண்டு அச்சப்பட வேண்டாம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிலையை அடைந்திருப்பது உங்கள் திறமையால். நீங்கள் நாட்டின் நாயகர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்,” என்றும் அவர் ஊக்கமளித்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் துணைச் செயலாளர் ஹாங் ஜின் சான், காமன்வெல்த் ஸ்போர்ட் மலேசியாவின் பொதுச் செயலாளர் முகமது நாசிர் அலி, மலேசிய பாராலிம்பிக் கவுன்சிலின் பொதுச் செயலாளர் ரியர் அட்மிரல் சுப்ரமணியம் ராமன் நாயர், தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குநர் ஜெஃப்ரி ஙாடிரின் மற்றும் தேசிய விளையாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வெல்லபாண்டியன் பொன்னுசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த உற்சாகச் சந்திப்பு, கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசிய அணியின் அதிகாரப்பூர்வ பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

Scroll to Top