கோலாலம்பூர், 23 ஜூலை 2026 : நாட்டில் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், வேலை அழுத்தம் மற்றும் மாறிவரும் தொழிலாளர் சூழலால் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய அவையில், செனட்டர் டத்தோ ஸ்ரீ வெல் பாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தொழிலாளர் சந்தையின் தேவைகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், PERKESO சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கும் வகையில், தொழில்சார் சுகாதார வழிகாட்டுதல்கள் விரிவுபடுத்தப்படுவதுடன், தொழிலாளர்களின் மனநலம், உளவியல் அபாய மேலாண்மை மற்றும் பாதுகாப்பான, ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்கும் முயற்சிகளுக்கும் அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய சமூகத்தினருக்கான சமூகப் பாதுகாப்பு, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பொருத்த சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் PERKESO மற்றும் மலேசிய இந்தியர் மாற்று அலகு (MITRA) இடையேயான ஒத்துழைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றார். MYFutureJobs தளத்தின் மூலம் அதிகமான இந்திய சமூகத்தினர் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பில் எந்த தொழிலாளரும், எந்த சமூகத்தினரும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வதே MADANI அரசின் முக்கிய இலக்காகும் என்றும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.






