கோலாலம்பூர், 18 மே 2026 : மலேசியா முழுவதும் உள்ள இந்திய தொழில்முனைவோருக்கு KUSKOP-இன் முத்ரா திட்டத்தை நெருக்கமாகக் கொண்டு செல்லும் நாடு தழுவிய “முத்ரா ரோட்ஷோ” முன்னெடுப்பை மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை (MAICCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான இந்திய தொழில்முனைவோர் மூலதனத் தொகுப்பு மற்றும் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் KUSKOP வழங்கியுள்ள RM220 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம், இந்தியர்களுக்குச் சொந்தமான வணிகங்களை வலுப்படுத்தவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவளிக்கவும், அனைத்து நிலைகளிலும் உள்ள தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்கவும் இந்த முத்ரா திட்டம் முக்கிய வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோட்ஷோவின் மூலம், தொழில்முனைவோருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, தகவல், வழிகாட்டுதல், நிதி ஆதரவு பாதைகள் மற்றும் வணிக மேம்பாட்டு உதவிகளை நேரடியாக கொண்டு சேர்ப்பதே MAICCI-யின் நோக்கமாகும்.
இது வெறும் நிதி வழங்கும் திட்டமாக மட்டுமல்லாமல், அணுகல் வசதி, தொழில்முனைவோர் அதிகாரமளித்தல், வணிக வளர்ச்சி மற்றும் நீண்டகால பொருளாதார பங்கேற்பை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
மலேசியா முழுவதும் உள்ள இந்திய தொழில்முனைவோர் எந்த நிலையிலும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் MAICCI தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










