வாஷிங்டன், 26 மார்ச் 2026 : அமெரிக்காவின் அதிபராக Donald Trump கடந்த 2025 ஜனவரி 20ஆம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றார். தனது ஆட்சி காலத்தில், அரசின் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
ஆனால், ஈரான்–இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டு, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பாதுகாப்பு செலவுகள் அதிகரித்ததுடன், பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை உருவாகி, அவற்றின் விலையும் உயர்ந்தது. இந்த நிலைமை, அமெரிக்க மக்களிடையே அதிபர் டிரம்ப் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ் அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்பின் ஆதரவு விகிதம் 40 சதவீதமாக பதிவாகியது. இதனைத் தொடர்ந்து, நேற்று வெளியான புதிய கருத்துக் கணிப்பில், அவரது ஆதரவு மேலும் குறைந்து 36 சதவீதமாக சரிந்துள்ளது.
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தேவையற்றது என்ற பொதுமக்களின் கருத்தே, இந்த ஆதரவு குறைவிற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், டிரம்பின் மக்கள் ஆதரவு இவ்வாறு கணிசமாக குறைந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.





