என் தமிழ்

NASA : 2030க்குள் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மையம் அமைக்க இலக்கு

வாஷிங்டன், 26 மார்ச் 2026 : பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் இருப்பதா, மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான NASA முக்கிய பங்கு வகித்து வருகிறது.

1970க்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கில் ‘ஆர்டெமிஸ்-2’ திட்டத்தை நாசா முன்னெடுத்து வந்தது. இந்த திட்டத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலவைச் சுற்றி விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தையும் நாசா முன்வைத்திருந்தது. ஆனால் தற்போது அந்த திட்டத்தை கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, நிலவில் நேரடியாக நிரந்தர ஆராய்ச்சி மையம் அமைப்பதே புதிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.1.86 லட்சம் கோடி (20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2030க்குள் இந்த நிரந்தர ஆய்வு மையத்தை உருவாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நாசா தலைவர் Jared Isaacman தெரிவித்துள்ளார்.இந்த திட்டம் வெற்றியடைந்தால், மனிதர்களின் நிலா ஆராய்ச்சி புதிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top