என் தமிழ்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: அரபு நாடுகள் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி, 03 மார்ச் 2026 : ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கடந்த 28ஆம் தேதி ஒருங்கிணைந்த கடும் தாக்குதல் மேற்கொண்டன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்பத்தினர், பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர், புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட 787 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள பகுதிகளை நோக்கி ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்கிறது. இந்த பரஸ்பர மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பல நாடுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தங்கள் வான்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன.

இந்த சூழ்நிலையில், மத்திய கிழக்கில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை அவசரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓமன் மற்றும் குவைத் ஆகிய அரபு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமத் அல் முபாரக் ஆகியோருடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலைமை மற்றும் அந்நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Scroll to Top