என் தமிழ்

மலேசிய இந்திய மாணவர்களுக்கு ஒளி விளக்கும் ‘பிரம்மாஸ்திரா 2.0’ கல்வி முகாம்

மூவார், 03 மார்ச் 2026 : மூவரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் நிலையம், 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து மலேசிய இந்திய மாணவர்கள் உயர்கல்வி உலகில் முன்னேற வழிகாட்டி வருகிறது. “கல்வியே சக்தி, அறிவே ஆயுதம்” என்ற உயர்ந்த கொள்கையை முன்வைத்து, குறைந்த கட்டணத்தில் தரமான வகுப்புகள், ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகள், கல்வி முகாம்கள் மற்றும் தெளிவான தொழில் வழிகாட்டுதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறது.

இந்த ஒளியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் நோக்கில், இந்நிலையத்தில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பிரம்மாஸ்திரா 2.0 எனும் சிறப்பு கல்வி முகாமை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முகாம் மார்ச் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. குறிப்பாக படிவம் 1 மற்றும் 2 மாணவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இந்த முகாம், ஒரு சாதாரண பயிற்சி முகாமாக இல்லாமல், மாணவர்களின் கனவுகளைத் தூண்டும், தன்னம்பிக்கையை வளர்க்கும் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மாற்றப் பயணமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகாம், கல்வி திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வழிகாட்டுதல், ஊக்கவுரை மற்றும் தனிமனித மேம்பாட்டு அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

எனவே, அறிவின் ஒளியில் உயர விரும்பும் அனைத்து மாணவர்களையும், தங்கள் கனவுகளை நனவாக்கும் முதல் படியை எடுத்து வைக்க அழைத்து, மூவர் ஸ்ரீ முருகன் நிலையம் அன்புடன் வரவேற்கிறது.

Scroll to Top