விமான விபத்தில் பலியான பயணிகள் உடல்கள்: நெதர்லாந்து சென்றது

விமான விபத்தில் பலியான பயணிகள் உடல்கள்: நெதர்லாந்து சென்றது

maylasian-air

உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிளர்ச்சியாளர்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றும் உறுதி செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர். அவர்களில் 193 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள்.

எனவே, அவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசு தீவிரம் காட்டியது. அதை தொடர்ந்து அந்நாட்டு நிபுணர் குழு உக்ரைன் வந்தது. அங்கு கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பயணிகள் உடலை பெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன் பயனாக குளிர் சாதன ரெயில் பெட்டிகளில் பாதுகாத்து வைத்திருந்த பயணிகளின் 200 உடல்களை மலேசிய அதிகாரிகளிடம் கிளர்ச்சியாளர்கள் ஒப் படைத்தன. மேலும், சுடப்பட்ட விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 கருப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டன.

அவை விபத்து நடந்த 5 நாட்களுக்கு பிறகு உக்ரைனின் கார்கிவ் நகருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து நேற்று நெதர்லாந்தில் உள்ள எய்ந்தோவன் நகருக்கு மாலை 4 மணிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

அதை தொடர்ந்து அங்கு உடல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகே பொது மக்கள் மலர் கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் உடல்கள் கோர்போரால் வான் அவுடேஸ்டனில் உள்ள ராணுவ குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்படுகிறது.

இது ஒரு வாரம் அல்லது 2 மாதங்கள் கூட ஆகலாம் என நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மலேசியாவில் இன்று தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விமானத்தில் கருப்பு பெட்டிகளை மலேசிய அதிகாரிகள் நெதர்லாந்து நிபுணர் குழுவிடம் ஒப்படைத்தனர். ஆய்வுக்காக அவை இங்கிலாந்தில் உள்ள பார்ன்போரோவுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.