மோடி அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது: கருத்துக்கணிப்பு

மொடி-111-300x173

நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக பெரும்பாலானவர்கள் ஆன்–லைனில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த மே மாதம் பதவி ஏற்றது. பிரதமர் மோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் மோடி அரசின் முதலாவது ரெயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த 3 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி பா.ஜனதாவின் பொது மக்கள் பிரசார கொள்கை நிபுணரும், பா.ஜனதா பிரமுகருமான ராஜேந்திர பிரதாப் குப்தா என்பவர் ‘ஆன்–லைன்’ மூலம் கருத்து கணிப்பு நடத்தினார்.

தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர், முதலீட்டாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், கட்டிட காண்டிராக்டர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பா.ஜனதாவின் தகவல் தொடர்பு பிரிவு ஒத்துழைப்புடன் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரிடம் ஆன்– லைனிலேயே கருத்து கேட்கப்பட்டது. அதில், பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?, மோடி அரசின் செயல்பாடுகள் எப்படி என்பது பற்றியும், பல்வேறு திட்டங்கள் பற்றியும் கருத்து கேட்கப்பட்டது.

அதில் 10 ஆண்டுகள் நடந்த காங்கிரஸ் கூட்டணி அரசைவிட 60 நாள் பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர்.

30 சதவீதம் பேர் தங்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் 20 சதவீதம் பேர் எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது. 10 ஆண்டுகள் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை முந்திவிட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மராட்டியம், அரியானா, காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று தேர்தல் நடத்தினால் கூட இந்த 4 மாநிலங்களிலும் பா.ஜனதா வெற்றி பெறும். 80 சதவீத இடங்களை கைப்பற்றும் சூழ்நிலை நிலவுவதாக கருத்து கணிப்பு நடத்திய ராஜேந்திர பிரதாப் குப்தா தெரிவித்தார்.

42 சதவீதம் பேர் ஊழலை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும் என்றும், 24 சதவீதம் பேர் பணவீக்கம் மற்றும் விலைவாசிக்கு எதிராகவும், 26 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருப்பதாகவும் ராஜேந்திர பிரதாப் மேலும் கூறினார்.

மோடியின் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு வாரணாசி தொகுதியில் 75 சதவீதம் பேர் ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

25 சதவீதம் பேர் புனித நகரான வாரணாசியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

வாரணாசி தொகுதியில் மட்டும் 31 ஆயிரம் பேர் கருத்து கணிப்பில் பங்கேற்றனர்.