மலேசிய விமானத்தின் பின்னால் வந்த ஏர்-இந்தியா விமானம் நூலிழையில்: தப்பியது

மலேசிய விமானத்தின் பின்னால் வந்த ஏர்-இந்தியா விமானம் நூலிழையில்: தப்பியது

Aira

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் நேற்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.


விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் வந்தது என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏ.ஐ. 113 என்ற அந்த விமானம் 126 பயணிகளுடன் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலிருந்து போர் நடந்துவரும் உக்ரைன் வழியாக டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அதற்கு பின்னால் 25 முதல் 50 மைல்கள் தூரத்தில் ஏர்-இந்தியா விமானம் வந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸை சேர்ந்த விமானம் ஒன்றும் அதன் பின்னால் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐந்து நிமிட இடைவெளியில் இந்த இரு விமானங்களும் பெரும் விபத்திலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. எனினும் உக்ரைனில் போர் ஏற்பட்டவுடனே அதன் வான்வெளியில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு விமானிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் இயக்குனரான எஸ்.பி.எஸ் சூரி கூறியுள்ளார். இனி உக்ரைன் நாட்டின் ஒட்டு மொத்த வான்வெளி பகுதியையே தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.