பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பக்காத்தானுக்கு ஒரு சவாலாக அமையும்

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பக்காத்தானுக்கு ஒரு சவாலாக அமையும்

image_gallery

பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நோர் சாஹிடி ஒமார் கல்லீரல் புற்றுநோய் காரணமாக சீனாவில் உள்ள குவாங்சாவ் மருத்துவமனையில் காலமானார்.
57 வயதான டத்தோ நோர் சாஹிடி கடந்த மே மாதம் புற்றுயால் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த இரு வாரங்களாக அவர் சீனாவில் குவாங்சாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிட்ட டத்தோ நோர் சாஹிடி ஒமார் 10,174 வாக்குகள் பெற்று பெங்காலான் குபோர் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டத்தோ நோர் சாஹிடியின் மறைவைத் தொடர்ந்து பெங்கலான் குபோர் சட்டமன்றம் காலியாகியுள்ளதால் விரைவில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடியானது, பெங்காலான் குபோர் இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் பலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், இந்த இடைத்தேர்தல், பாஸ் கட்சித் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் ஓய்வு பெற்ற பிறகு அம்மாநில மந்திரி புசாராகப் பதவியேற்ற டத்தோ அஹ்மாட் யாக்கோப் தலைமைத்துவத்தின் கீழ் கிளந்தான் பாஸ் கட்சியின் பலத்திற்கும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர் டாக்டர் கமாருல் யூசோப் தெரிவித்தார்.
பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் மறைவைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் 60 நாட்களுக்குள் இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இதற்கு முன்னற் இரு தவணைகள் கெஅடிலான் கட்சியின் பிடியில் இருந்துள்ள பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் கிளந்தான் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதி என டாக்டர். கமாருல் யூசோப் தெரிவித்தார்.
அந்த வகையில், சிலாங்கூர் மாநில அரசியல் நெருக்கடிகளால் சில உட்பூசல்களைச் சந்தித்து வரும் கூட்டணி கட்சிகளாக பி.கே.ஆர்- பாஸ் கட்சிகளின் ஒற்றுமை இந்த இடைத்தேர்தலில் புலப்படும் என்றும் டாக்டர் கமாருல் சுட்டிக்காட்டியுள்ளார்.