நாட்டுப்பற்று பயணம்: வழிப்பறி கொள்ளையர்களிடம் முடிந்தது

நாட்டுப்பற்று பயணம்: வழிப்பறி கொள்ளையர்களிடம் முடிந்தது

Port_ThriftShop-960x530

மது மகள்களுடன் ஆர். ரகு என்பவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொண்ட நாட்டுப்பற்று பயணம் திரங்கானுவில் வழிப்பறிக்கொள்ளையில் முடிந்தது.

ரகுவும், அவரது மகள்களான 15 வயது நித்ய ரூபிணி மற்றும் 12 வயது தர்ஷினி  ஆகிய மூவரும் சைக்கிளில் நேற்று காலை 7.30 மணியளவில் நகரத்தின் மையத்தை எட்டும் தூரத்தில் இருந்தபோது வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளனர்.

தமது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஜி.நீலாவது காரில் பின் தொடர்வது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று அவ்வாறு அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதற்கு ஆர்.ரகு குடும்பத்தினர் ஒப்புக்கொண்ட போது திடீரென அவர்களில் ஒருவன் கத்தியைக் காட்டி அவர்களிடம் பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை கொடுக்குமாறு உத்தரவிட்டதாக நீலாவதி தெரிவித்தார்.

‘எங்களுக்கு வேறு வழியில்லாததால், அனைத்தையும் ஒப்படைத்தோம். அக்கொள்ளையர்கள் 2600 ரிங்கிட் மற்றும் ஐபேட் ஒன்றையும் காரிலிருந்து கொள்ளையிட்டதாக நீலாவதி தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தங்களின் மெர்டேக்கா பயணத்தின் போது பல்வேறு தரப்பினர் வழங்கிய 300 ரிங்கிட் தொகையையும் அவர்கள் களவாடியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த கசப்பான அனுபவத்திற்குப் பின்னரும், தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பயணத்தைத் தாங்கள் தொடரவிரும்புவதாக நீலாவதி தெரிவித்தார்.

ஆகஸ்டு 31-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தீபகற்ப மலேசியாவில் பல இடங்களுக்கு நாட்டுப்பற்று பயணம் மேற்கொள்ள ரகு திட்டமிட்டிருந்தார். அந்த வகையில், ஆர். ரகுவின் குடும்பத்தினர் இதுவரை 2800 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.