தீபாவளி பண்டிகை-திருட்டை தடுக்க போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை-திருட்டை தடுக்க போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு

13THFLYOVER_949902f

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களிடம் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும், வெளி மாவட்டங்களில் இருந்து தீபாவளி திருடர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மதுரை, சிவகங்கை, காரைக்குடி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து கொள்ளையர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். ஆந்திர மாநில திருடர்களும் வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு, கூலிக்கு திருடும் கும்பலை ஒரு குறிப்பிட்ட முக்கிய புள்ளி களத்தில் இறக்கி உள்ளாராம்.

சேலம், வேலூர் மாவட்டங்களில் இருந்து இந்த கும்பல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய புள்ளி தினமும் ரூ.200 சம்பளம், இலவச சாப்பாடு, தங்கும் இடம், மேலும் கொள்ளை அடிக்கும் பணம் அல்லது நகைகளில் ஒரு பகுதி பங்கு போன்றவற்றை திருடர்களுக்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்துள்ளாராம்.

இந்த கொள்ளைக்கும்பலில் கர்ப்பிணி பெண்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கைவரிசை காட்டுவார்கள். கர்ப்பிணி பெண்கள் என்றால் பொதுவாக கூட்டம் நிறைந்த பஸ்கள் மற்றும் ரெயில்களில் மற்ற பயணிகள் இரக்கம் காட்டுவார்கள். அதை பயன்படுத்தி இந்த கர்ப்பிணி கொள்ளை கும்பல் கைவரிசை காட்டும்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஓடும் பஸ்சில் ஒரு பெண்ணிடம் பணம் திருடியதாக நிறைமாத கர்ப்பிணி பெண் பிடிபட்டார். அந்த பெண்மணி திருடிய பணத்தை உடனடியாக வேறு நபரிடம் கைமாற்றி விட்டாராம். அந்த பெண்ணிடம் கொள்ளைப்பணம் இல்லாததால், அந்த பெண்ணை கைது செய்ய முடியாமல் போலீசார் எச்சரித்து அனுப்பிவிட்டனர். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, மேற்கண்ட தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை விடுவித்தாலும், அந்த பெண்ணை ரகசியமாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தகவல் அடிப்படையில் சென்னையில் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாறு வேடத்தில் ஆண், பெண் போலீசார் சுற்றுகிறார்கள். தீபாவளி திருட்டு கும்பலை தீவிரமாக கண்காணிக்கிறார்கள். சென்னை தியாகராயநகரில் தீப்தி என்ற பெண்ணிடம் ஐ-போனை பறித்த சரவணன் (வயது 25) என்ற ஆசாமியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் உடமைக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜ் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.