சென்னையில் சைக்கிள் பாதை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

சென்னையில் சைக்கிள் பாதை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

cycle

காலமாற்றத்துக்கு ஏற்ப வாழ்க்கை நடைமுறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். ஒரு காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக செல்வது தான் வழக்கம். காலப்போக்கில் சைக்கிள் வந்தது. இப்போது அந்த காலமும் மாறிவிட்டது. மோட்டார் சைக்கிள், கார்கள் வந்துவிட்டன.

மோட்டார் சைக்கிள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சாலைகளில் மோட்டார் சைக்கிள்களும், கார்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சைக்கிள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

அனைத்து பெரு நகரங்களை காட்டிலும் சென்னையில் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2001–ல் 46 சதவீதம் பேர் சைக்கிள் பயன்படுத்தினார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 2011–ல் 37 சதவீதமாக குறைந்தது. இருப்பினும் மற்ற நகரங்களை காட்டிலும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புனே – 33 சதவீதம், டெல்லி – 31 சதவீதம், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா – 26 சதவீதம், பெங்களூர் – 23 சதவீதம், மும்பை – 9 சதவீதம்.

விரைவாக செல்வதற்கு பணிகளை வேகமாக முடிக்க மோட்டார் சைக்கிள் அல்லது கார் அவசியம் என்ற கட்டாய சூழ்நிலை உருவாகி விட்டது. இருந்தாலும் வாழ்க்கை நலத்துக்கு நடைப்பயிற்சி அவசியம் என்பதும் கட்டாயமாகி உள்ளது. சைக்கிள் மிதிப்பதும் நடைபயிற்சியை போல் மிகச்சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

எனவே சைக்கிள் மிதிக்கும் ஆர்வம் இருந்தாலும் பெரு நகரங்களில் சைக்கிளில் செல்வதற்கு தனிபாதை வசதி இல்லாததால் சைக்கிளில் மிதிக்க பலர் தயங்குகிறார்கள்.

புனேயில் சைக்கிள் பாதை 134 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பெங்களூரில் 40 கிலோ மீட்டரும், மும்பையில் 13 கிலோ மீட்டரும் உள்ளது.

சென்னையில் சைக்கிள் பாதை அமைக்கவும், வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.