சவூதி அரேபியாவில் அமெரிக்கர் சுட்டுக்கொலை: கொலையாளியை போலீஸ் சுட்டு பிடித்தது

சவூதி அரேபியாவில் அமெரிக்கர் சுட்டுக்கொலை: கொலையாளியை போலீஸ் சுட்டு பிடித்தது

Gun-murderer-638x424

அக்டோபர், 16 சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத். அங்கு அமெரிக்க ராணுவ நிறுவனம் நார்த்ராப் குருமேன் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக ‘வின்னெல் அரேபியா’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு படைக்கு பயிற்சியும், ஆதரவும் அளித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் அமெரிக்கர்கள் 2 பேர் நேற்று முன்தினம் ரியாத்தில் ஒரு காரில் வெளியே புறப்பட்டனர். தங்கள் நிறுவனத்தில் இருந்து சற்றுதொலைவில் உள்ள ஒரு பெட்ரோல் பல்க்கில், எரிவாயு நிரப்புவதற்காக அவர்கள் காரை நிறுத்தினர். அப்போது அங்கே வந்த ஆசாமி அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் கொலையாளியையும் சுற்றி வளைத்தனர். ஆனால் அந்த ஆசாமி தப்பி ஓட முயற்சித்தபோது, அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சவூதி அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றியும், அதன் பின்னணி என்ன என்பது குறித்தும் தகவல்கள் சேகரித்து வருகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.