காற்று மாசு காரணமாக நிறம் மாறும் காதலின் சின்னமான தாஜ்மஹால்

காற்று மாசு காரணமாக நிறம் மாறும் காதலின் சின்னமான தாஜ்மஹால்

taj-mahal

டிசம்பர் 12, உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றும், காதலின் சின்னமான தாஜ்மஹால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. 1600-ம் ஆண்டுகளில் மொகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய இந்த மாளிகையின் மேல்புறம் 115 அடி உயர பளிங்கு கற்களால் ஆன கூம்பு உள்ளது. அதுமட்டுமின்றி 130 அடி உயர ஸ்தூபிகளும் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு யுனெஸ்கோ தாஜ்மஹாலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. 1970-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாஜ்மஹாலின் தூய வெண் நிறம் பழுப்பாக மாறுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனால் தாஜ்மஹாலை தூய்மைபடுத்துவது, மாளிகையின் மீது படிந்திருக்கும் தூசி மற்றும் மண்ணை அகற்றுவது, வெள்ளை நிற களிமண் பூசுவது மற்றும் அகற்றுவது ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து பளிங்கு கற்களை பாதுகாத்து வந்தனர்.
காற்றில் உள்ள மாசு தான் இந்த நிறம் மாறுவதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இதற்கு உரிய ஆய்வுகள் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கான்பூர் ஐ.ஐ.டி., இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், விஸ்கான்சின் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தாஜ்மகால் நிறம் மாறுவதற்கான காரணம் என்ன? என்ற ஆய்வை மேற்கொண்டன.
இதற்காக இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில் இருந்து 2012 ஜூன் வரை தாஜ்மஹால் வளாகத்தில் காற்று வடிகட்டும் கருவிகள் வைத்து மாதிரிகளை சேகரித்தனர். அந்த கருவிகளில் சேகரிக்கப்பட்டவற்றை ஆய்வு செய்ததில் 2.5 மைக்ரானுக்கும் சிறிதாக உள்ள கரித்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே தாஜ்மஹாலின் நிறம் பழுப்பானதற்கு காரணம் என்றும் கண்டறிந்தனர்.