காணாமல் போன மலேசிய விமானத்தை தேட புதிய உபகரணங்கள்

j25

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8-ம் தேதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் மர்மமான முறையில் மாயமானது. அந்த விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் மூலம் தீவிரமாக தேடப்பட்டது.

கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைப்பதாக கூறியதையடுத்து அதனை தேடும் முயற்சியும் முடுக்கி விடப்பட்டது. 2 மாதமாக தேடியும், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட தேடுதல் பணி குறித்து ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தின.

ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ், தேடுதல் குழுவின் தலைவர் ஆக்னஸ் ஹூஸ்டன் ஆகியோர் மலேசிய பாதுகாப்பு துறை மந்திரி ஹிஷாமுதின் உசைன் மற்றும் சீன போக்குவரத்து துறை மந்திரி யாங் சுவான்டாங் ஆகியோரை கான்பெராவில் சந்தித்தனர். அப்போது, இந்திய பெருங்கடலுக்கு அடியில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தேடும் பணியை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபடுவதற்கு புதிய மற்றும் அதிநவீன உபகரணங்களைப் பெறுவதற்கான டெண்டர் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக ட்ரஸ் தெரிவித்தார்.

இந்த மூன்று உயர் தலைவர்களும் நாளை மறுநாள் மீண்டும் சந்தித்து, இதுவரை பெறப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்கின்றனர்.