எச்.ஐ.வி. பாதித்தும் 43 உலக சாதனைகளை முறியடித்தவரின் வினோத முயற்சி

எச்.ஐ.வி. பாதித்தும் 43 உலக சாதனைகளை முறியடித்தவரின் வினோத முயற்சி

AIDS

பல்வேறு வகையில் உலக சாதனை படைத்த 43 பேரின் முந்தைய சாதனைகளை தனது தனித் திறமையாலும், மனம் தளராத முயற்சியாலும் முறியடித்தவர், ஆண்ட்ரே வேன் ஸிஜில்(54).

எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது ஓடாத காரில் அமர்ந்தபடி, உடற்பயிற்சி சைக்கிள் போன்ற வெறும் சக்கரம் மட்டும் சுழலும் சைக்கிளை மிதித்தபடி 6,700 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் புதிய சாதனையை மேற்கொண்டுள்ளார். 

இதற்காக, தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்ஷ்வானே நகரின் பிரபல ஷாபிங் மாலில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு காருக்குள் கடந்த மே மாதம் 23-ம் தேதி ஏறி அமர்ந்த இவர் வாரத்தின் ஏழு நாட்களிலும் சைக்கிளின் பெடலை ஓயாமல் மிதித்து 5,731 கிலோ மீட்டர் என்ற குறியீட்டை எட்டியுள்ளார். 

இன்னும் 969 கிலோ மீட்டர் தூரத்தையும் தனது சைக்கிளில் மிதித்து விட்டால் 44-வதாக புதிய உலக சாதனையை ஆண்ட்ரே வேன் ஸிஜில் ஏற்படுத்தி விடுவார். 

அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நோக்கத்துக்காக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், வெறும் பணத்துக்காக மட்டுமன்றி இந்த சாதனையை மறைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கும் அவர் பிறந்த அதே தேதியில் பிறந்த தனது தாயாருக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக தெரிவித்தார். 

ஓடும் காருக்குள் அமர்ந்துக் கொண்டே சைக்கிள் மிதிப்பது ‘போர்’ ஆன விஷயம் என்பதால், இந்த ஒன்றரை மாத காலத்தில் சுமார் 50 புத்தகங்களை படித்து முடித்து விட்டதாகவும் இவர் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.