உயிருக்கு போராடிய குழந்தையை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று காப்பாற்றிய போலீசார்

உயிருக்கு போராடிய குழந்தையை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று காப்பாற்றிய போலீசார்

Helicopter

அபுதாபி நகர போலீசார் ரோந்துப் பணிகளுக்கென நவீன ரக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஹெலிகாப்டர்களில் உயிர் காக்கும் உபகரணங்களுடன் கூடிய முதலுதவி வசதியும் உள்ளது. 

ரோந்துப் பணியின் போது சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை இந்த ஹெலிகாப்டரில் ஏற்றி, வான்வழியே வெகு விரைவாக சென்று, ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து, அதிக ரத்த இழப்பையும், உயிரிழப்பையும் போலீசார் தவிர்த்து வருகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக, ஆபத்தில் இருக்கும் நோயாளிகளையும் இந்த ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து, உயிர் பிழைக்க வைக்கும் உன்னத சேவையையும் மனிதநேய அடிப்படையில் போலீசார் செய்து வருகின்றனர்.

அவ்வகையில், ஷேக் கலிபா அஸ்பத்திரியில் இருந்து ஒரு வயதான மூதாட்டியை ஏற்றிச் சென்று அல் கய்மா நகரில் உள்ள சக்ர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து காப்பாற்றிய போலீசார், அபுதாபியின் டெல்மா தீவுப் பகுதியில் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தையையும் ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று அல் ரஹ்பா ஆஸ்பத்திரியில் அனுமதித்து, உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.