இளைஞர்களின் நல்வழிகாட்டி டத்தோ டி.மோகன் உதவித்தலைவராக வேண்டும்

இளைஞர்களின் நல்வழிகாட்டி டத்தோ டி.மோகன் உதவித்தலைவராக வேண்டும்

mohan

அக்டோபர் 6, இந்திய சமுதாயத்தினரின் தாய்க்கட்சியான மஇகாவில் பதவிகளுக்கு அப்பாற்பட்டு நாடு தழுவிய அளவில் இளைய சமுதாயத்தினரை கவர்ந்து அவர்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி சேவையாற்றி வரும் மஇகா தேசிய இளைஞர் பகுதி முன்னாள் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்கள் மஇகாவின் உதவித்தலைவர் பதவிக்கு வர வேண்டும். மஇகாவில் 3 உதவித்தலைவர் பதவிகள் இருக்கின்ற நிலையில் 1 பதவி இளைஞர் தலைமுறை சார்ந்து டத்தோ டி.மோகன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என செல்வராஜூ கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


பதவிக்காக அன்றி முழு அர்ப்பணிப்போடு எதனையும் எதிர்பாராது உழைத்து வரும் டத்தோ டி.மோகன் அவர்களின் வயதை காரணம் காட்டி மஇகாவின் உயர்மட்ட பதவிகள் சார்ந்து ஒப்பீடு செய்யாது ஒரு இளைஞர் அவருக்கு பின்னால் இருக்கும் பல இளைஞர்கள் என்ற கோணத்தில் ஒப்பீடு செய்து அவர் உதவித்தலைவராவதை வரவேற்க வேண்டும்.
மஇகாவில் முன்னாள் தலைமை நிகழ்த்திய தேர்தல் முறைகேட்டினால் கட்சியின் நிலைமை மிக மோசமான சூழலை எட்டியது. அன்றைய காலக்கட்டத்தில் இருந்து மஇகாவிற்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியது வரை டத்தோ டி.மோகன் அவர்களின் போராட்டங்களை நாம் எளிதில் மறந்து விட முடியாது. மஇகாவிற்குள் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் இவரின் பங்களிப்பு அளப்பறியது.


இன்று நமது மஇகா புதிய பரிணாமத்தோடு பயணம் செய்கிறது. அதே நேரத்தில் இளைஞர்களை மஇகாவில் வலுப்படுத்தும் வண்ணம் இவர் தேசியஉதவித்தலைவராக வந்தால் அது கண்டிப்பாக கட்சிக்கு நன்மையை கொடுக்கும். தோழமைக்கட்சிகளில் இளைஞர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள். அது போல நமது கட்சியிலும் மாற்றம் வேண்டும். டத்தோ டி.மோகன் அவர்களை புகழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நான் கருத்துரைக்கவில்லை. அவரது செயல்பாடுகள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து வருவதை மையப்படுத்தியே இதனை தெரிவிக்கிறேன்.


என்னைப்பொறுத்த வரையில் மஇகாவில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த நேரத்தில் புதிய எழுச்சியாக இவர் உதவித்தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இதுவே இளைஞர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கம் நிறைவேற டத்தோ டி.மோகன் போன்ற துடிப்புமிக்க இளைஞர்கள் உயர்மட்ட பதவிகளுக்கு வர வேண்டும். 


பதவி இல்லாமல் சேவையாற்றி வரும் இவரிடம் பதவி கிடைத்தால் இன்னும் அதிகமாக சேவையாற்றுவார். அதன் வழி சமுதாயத்தின் ஆதரவையும் நாம் வலுப்படுத்திக்கொள்ள முடியும்.