இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள்: வரலாற்றை கொண்டாட தவறிய தமிழ்ச் சமூகம்

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள்: வரலாற்றை கொண்டாட தவறிய தமிழ்ச் சமூகம்

tirupathi-1

தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. 

கி.பி 1014 ஆம் ஆண்டு அரியணை ஏறிய இராஜேந்திர சோழன் ஏறத்தாழ 30 ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்ட பெருமை கொண்டவன். அவன் மன்னனாக பதவி வகித்த கடைசி 15 ஆண்டுகள் போருக்கு செல்லாமல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை நலனுக்காகவும் காவல் அரணாக நின்றான். இந்த காலகட்டத்தில் சோழ நாட்டில் ஏராளமான ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டன. அதில் ஒன்று அங்குள்ள சோழகங்கம் ஏரி. 

இராஜேந்திரனின் இந்த அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் எடுத்ததற்கெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திவரும் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களோ, எழுத்தாளர்களோ மற்றும் திரைத்துறையினரோ இவ்விழாவை பற்றி சிந்திக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அதே சமயம் இதில் விதிவிலக்காக பொதிகை தொலைக்காட்சி இவ்விழாவை ஒளிபரப்பியது மனதிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. 

தமிழரின் வீரத்தையும், கலையையும், அறத்தையும் உலகிற்கு சிறப்பாக எடுத்துக்கூறிய சொற்பொழிவாளர்களின் பேச்சை நேரடியாக ஒளிபரப்பி சிறப்பித்தது பொதிகை தொலைக்காட்சி. இவ்விழாவில் சோழர் பரம்பரையின் வரலாற்றை உயிருடன் நமக்கு கண் முன் காட்டிவரும் எழுத்தாளர் பாலகுமாரன் கலந்துகொண்டது சிறப்பாக அமைந்திருந்தது. அரசியல் அரங்கிலிருந்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

இவ்விழாவிற்காக தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 1000 இரு சக்கர வாகனங்களில் ஜோதி ஏந்திய இளைஞர்கள் கங்கை கொண்ட சோழபுரம் வந்ததும், தஞ்சை கோவிலில் இந்த பயணத்தை பாலகுமாரன் தொடங்கி வைத்ததும் மிகவும் சிறப்பாக இருந்தது. மாலையில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் இராஜந்திரன் அரியணை ஏறிய 1000ஆவது ஆண்டு நினைவாக 1000 விளக்குகள் ஏற்பட்டன. 

நாட்டிற்கே முன்னுதாரணமாக பஞ்சாயத்து ஆட்சி முறையை கொண்டு வந்தவன் இராஜேந்திர சோழன். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பஞ்சாயத்து நிர்வாகமும் இராஜேந்திரனுக்கான விழாவை நடத்தவில்லை. வரலாற்றை மறந்தவர்களாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர் உள்ளது தான் இதற்கு காரணம். 

சரி பஞ்சாயத்துகள் இப்படி இருந்தது என்றால், தொலைக்காட்சிகளும் தூங்கிக்கொண்டிருப்பது தான் எப்படி என்று தெரியவில்லை. வார நாட்களில் நாடகம், வார இறுதி நாட்களில் திரைப்படம் போன்றவைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழரின் வரலாற்று நிகழ்வான இராஜேந்திரன் அரியணை ஏறிய 1000ஆவது ஆண்டு விழாவிற்கும் தந்திருக்க வேண்டும் அல்லவா? 

நாள் முழுவதும் நமது வீரத்தின் மாண்பையும், அறத்தின் கூற்றையும், வாழ்வியல் நடைமுறைக்கான முன்னேற்பாடுகள் பற்றியல்லவா நேற்றைய நாள் முழுவதும் ஒவ்வொரு ஊடகமும் கொண்டாடியிருக்கவேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை? பரபரப்பு ஒன்றையே குறிக்கோளாக ஏற்று செயல்படும் ஊடகங்கள் இனியாவது தமிழர் பரம்பரைக்கு உரிய முக்கியத்துவத்தை தரவேண்டும். ஏனென்றால் மக்களுக்கு அழிவுப் பாதையை காண்பிப்பதை விட ஆக்கப்பூர்வமான பாதையை காண்பிப்பது ஊடகத்தின் கடமையாகும். 

தொலைக்காட்சிகள் தான் இப்படி என்றால் எழுத்தாளர்கள் சமூகமும் இவ்விழாவை
சிறப்பாக நடத்த முயற்சிக்கவில்லை. திருமணத்தின் மாண்பையே குலைக்கும் வகையில் விவாகரத்து வாங்குவதில் தவறில்லை என்று வாதாடும் எழுத்தாளர்கள் உள்ள நாட்டில் எப்படி தமிழரின் சரித்திரத்தை சிறப்பிக்க நேரமிருக்கும்? 


திரைத்துறையினரும் கூட இவ்விஷயத்தில் சோடை போனது வருத்தத்தை அளிக்கிறது. திரையுலகையும், மக்களையும் புதிய பாதையில் அழைத்துச்செல்லும் ராம், சமுத்திரக்கனி, ஜெனநாதன், பாலா போன்றவர்களாவது தமிழரின் சரித்திரம் இராஜேந்திரனின் அரியணை ஏறிய விழாவை கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அவர்களே இவ்விழாவை மறந்தது மிகப்பெரிய தவறு என்று தான் தோன்றுகிறது. 

இத்தருணத்தில் மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்த சிறப்புமிக்க இக்கோயிலை உலக மரபுச்சின்னமாக மாற்ற பெருமுயற்சி செய்த தொல்லியல் துறை ஆலோசகர் கே.டி.நரசிம்மன், யுனெஸ்கோவில் இதற்காக வாதாடிய கோபாலஸ்வாமி ஆகியோரை மிகவும் பாராட்டவேண்டும். இந்த சிறப்புமிக்க முயற்சிக்கும், நேற்று நடைபெற்ற இராஜேந்திரனின் 1000ஆவது அரியணை விழாவை நடத்த மிகவும் உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பாளர் கோமகனுக்கும் நன்றி கூறுவோம். 

இவ்விழாவில் பாலகுமாரன் ஆற்றிய உரையின் இறுதி பகுதியை மட்டும் பகிர்ந்துகொள்வோம். குழந்தைகளுக்கு தமிழ் பேச கற்றுக்கொடுங்கள், எழுத கற்றுக்கொடுங்கள், ஆனால் மறவாமல் தமிழ் வரலாற்றை கற்றுக்கொடுங்கள் என்று அவர் கூறியதை அனைவரும் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களிலாவது அனைத்து மக்களும் இராஜேந்திரன் அரியணை ஏறிய விழாவை கொண்டாடவேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.