இம்ரான்கான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முன்னாள் நீதிபதி

இம்ரான்கான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முன்னாள் நீதிபதி

imran-khan

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த 2013-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் நடந்ததாகவும், அதனை அப்போதைய நீதிபதியான இப்திகார் முகமது சௌத்ரி தடுக்காததால் தனது எதிரிகள் வெற்றி பெற்றதாகவும் கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு இரு தரப்பினருக்கும் இடையே மோதலை எழுப்பியது. சௌத்ரியின் மகனான அர்சலன் இப்திகார், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குண்டான தகுதிகளை இம்ரான்கான் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அவரது தேர்தல் வெற்றிக்கே சவால் விட்டுள்ளார்.

தற்போது இம்ரானால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நீதிபதி சௌத்ரி இம்ரான் மீது ரூ. 20 பில்லியன் மதிப்பு கொண்ட அவதூறு வழக்கு ஒன்றினை நேற்று பதிவு செய்துள்ளார். நாட்டின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட நீதிபதியை அவதூறு செய்ததன்மூலம் நீதித்துறைக்கு இழிவை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டிருந்த இந்தப் புகார் மனு சௌத்ரியின் வழக்கறிஞர்களால் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இம்ரான்கான் கூறியதற்கு இழப்பீடாக ரூ. 15 பில்லியன் தொகையும் அதனால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மனவேதனை, சித்திரவதை, துன்புறுத்தல், அவமானம் போன்றவற்றிற்காக ரூ. 5 பில்லியனும் நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என்று அந்த நீதிபதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இரண்டு வாரத்திற்குள் இம்ரான்கான் தனது நிபந்தனையற்ற மன்னிப்பைத் தெரிவிப்பாரேயானால் தனது மனுவைத் திரும்பப் பெறுவதாகவும், இல்லையெனில் இதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் நீதிபதி சௌத்ரி தெரிவித்துள்ளார்.