அமைதியாக இருக்கும் இளைஞர் பிரிவை சீண்டிப்பார்க்க வேண்டாம்

அமைதியாக இருக்கும் இளைஞர் பிரிவை சீண்டிப்பார்க்க வேண்டாம்

Sivaraj1 (1)

மார்ச் 11, அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது பேராளர்களின் மனம் கவரவும், தேசிய தலைவரின் உள்ளம் குளிர வைக்கவும் நினைத்து ஆர்வக்கோளாராக பேசுவது ம.இ.காவின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் போக்காகிவிட்டது.

ஒரு முன்னாள் உதவித்தலைவர் என்கிற நிலையிலும், ஒரு மாநில ம.இ.கா தலைவர் என்கிற முறையிலும் கட்சி உறுப்பினர்களுக்கு என்ன செய்தீர்கள், வருங்காலத்தில் என்ன செய்வீர்கள் என்று பேசுவது அழகு அதை விடுத்து தமது உரையை மெருகூட்ட ம.இ.கா இளைஞர் பிரிவை கிண்டல் செய்வதும், வீண் பொல்லாப்பு பேசுவதும் அவருக்கு தேவையற்ற வேலை.

தெளிவாக கூறுகிறேன், எந்த நிலையிலும் நாங்கள் யாருக்கும் அடிப்பணிந்தோ, ஆதரித்தோ கட்சியில் எங்களது நிலைப்பாடை அறிவித்தது இல்லை. காரணம் கடந்த ஒரு வருடம் சிறப்பாக செயலாற்றி மக்களின் ஆதரவை பெற்றவர்கள் ம.இ.கா இளைஞர் பிரிவினர். ஆதலால் எங்களுக்கு எதற்காகவும் யாரிடமும் பயமில்லை.

தேசிய ம.இ.கா தலைவர் எங்களது இளைஞர் பிரிவினரை இது வரை சந்தித்து பேசியதில்லை, உதவிக்கரம் நீட்டியதில்லை அவரது தலைமைத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆதலால் எங்களது நிலைப்பாடை முன் வைத்தோம். அதோடு நிறுத்திவிட்டு எங்கள் வேலை என்னவோ அதை செய்து கொண்டிருக்கிறோம். முன்பு கேஸில் (GERAKAN ANTI SAMY VELU) செய்ததுபோல் தேசிய தலைவரின் குடும்ப உறுப்பினர்களை அசிங்கப்படுத்தவில்லை, தேசிய தலைவரின் படத்தை செருப்பால் அடிக்கவில்லை, இன்று வரை கண்ணியமாக நடந்துகொண்டிருக்கிறோம். காரணம் நாங்கள் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் எங்களுக்கு நாகரீகம் அநாகரீகம் வித்தியாசம் தெரியும்.
ம.இ.கா இளைஞர் பிரிவை தரம் தாழ்த்தி பேசும் டத்தோ பாலகிருஷ்ணன் அவர்களுடன் நேரடி வாதம் செய்ய நான் தயார். நாங்கள் இளைஞர் பிரிவில் என்னென்ன செய்தோம், எங்களது சாதனைகளை சான்றுடன் நிருபித்து எதிர்கால திட்டங்களை எடுத்துரைக்கவும் நான் தயார். டத்தோ பாலா தயாரா? அவருக்கு கீழ் இருக்கும் ஜோகூர் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவிக்கு இதுவரை என்ன உதவி, எவ்வளவு நிதி ஒதுக்கீடு அவர் வழங்கியுள்ளார் என்று எடுத்துரைக்க முடியுமா? முடியாது. காரணம் அவர்தான் கட்சியின் தேசியத் தலைவர் போல் மாநில இளைஞர் பிரிவை கண்டுக்கொள்ளவே இல்லையோ.

அது ஒரு புறம் இருக்க டத்தோ ஸ்ரீ உத்தாமா காலத்திலிருந்து ஒரு பிரபல கட்டிட நிபுணராக வலம் வரும் டத்தோ பாலா இது வரை எத்தனை இளைஞர்களை இத்துறையில் மேம்படுத்தியுள்ளார் என்று கூற முடியுமா? வகிக்கும் பதவியை கொண்டு சமுதாய மேம்பாட்டுக்கு பங்களிக்காத இவர். இளைஞர் பிரிவினரை பற்றி விமர்சிக்க தகுதியற்றவர்.
எங்களது சேவை என்னவோ அதை முறையாக நாங்கள் செய்து வருகிறோம். இவரது வரப்பு மிறிய பேச்சினாலோ இல்லை சொன்னதை செய்யாத போக்கினாலோ அல்லது மாநில இளைஞர் பிரிவை அலட்சியம் செய்வதாலோ என்னவோ ம.இ.கா இளைஞர் பிரிவில் இவர் மேல் துளியளவும் மரியாதை கிடையாது. ஆகவே அந்த வெறுப்பை மேடையில் காட்டி எங்களை அசிங்கப்படுத்த நினைத்து நீங்கள் அசிங்கப்பட்டு நிற்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு திராணியிருந்தால் பொதுவாதம் செய்ய நாங்கள் தயார், இல்லையென்றால் இத்தோடு இளைஞர் பிரிவினரை சீண்டிப்பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கோட்டுக்கொள்கிறேன்.