ஜனவரி 20, 1980களின் நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், அம்பரிஷ் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது நட்பை புதுப்பித்துக்கொள்ளும் விதமாக வருடத்தில் ஒருநாள் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்திக்கின்றனர். அதுபோல் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ராதிகா மகள் ரேயன் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘இந்த நிகழ்ச்சி 1980 களில் ஒன்றிணைந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைக்கப்படுகிறது.
ஆட்டம், பாட்டு, நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன. மூத்த நடிகர்களுடன் இன்றைய நட்சத்திரங்களும் சிம்பு, வரலட்சுமி, வேதிகா, மஹத், வைபவ், நீது சந்திரா உள்ளிட்ட பலர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். ரஜினி, கமலுக்கு சிம்புவும், ஸ்ரீபிரியாவுக்கு நீதுவும். சில்க் ஸ்மிதாவுக்கு பிந்து மாதவி, நமீதாவும் மரியாதை செய்யும் விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மதுபாலா முதன்முறையாக நடனம் ஆட உள்ளார். கோவை சரளா, மனோபாலா நகைச்சுவை நாடகத்தில் பங்கேற்கின்றனர். மேலும் பல நடிகர்களுக்கு காட் ஃபாதராக விளங்கிய இயக்குனர் கே.பாலசந்தருக்கு அனைத்து நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். தவிர 1980களில் சாதித்த நடிகர், நடிகைகளின் ஒலி-ஒளி நிகழ்ச்சி யும் நடக்க உள்ளது. நாள், இடம் இன்னும் முடிவாகவில்லை.