கோலாலம்பூர், 24 அக்டோபர் 2026 : சிலாங்கூர் மாநிலம், கிள்ளானில் இந்து ஆலயம் எனக் குறிப்பிடப்பட்ட வளாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து மலேசிய இந்து சங்கம் (MHS) ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் குற்றச் செயல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ள மலேசிய இந்து சங்கம், இத்தகைய சம்பவங்களின் அடிப்படையில் இந்து ஆலயங்கள் அனைத்தின் மீதும் பொதுவான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையும் அவதூறான முத்திரைகளைப் பதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மலேசிய காவல்துறை (PDRM) மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக வெளியான தகவல்களைச் சங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தின் உண்மை நிலையை முழுமையாகக் கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் ஆன்மிகம், அறநெறி மற்றும் சமய விழுமியங்களைப் பாதுகாக்கும் இடங்களாகும். அவற்றைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது எனச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
முழுமையான விசாரணைக்கு அழைப்பு
இந்த விவகாரத்தில் காவல்துறை அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரித்து, சட்டவிரோதச் செயல்களில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
விசாரணையின் முடிவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களின் தொடர்பு மற்றும் பொறுப்புக்கு ஏற்ப சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், தனிநபர்கள் அல்லது சில குழுக்கள் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இந்து சமயத்தையோ, மலேசியாவில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களையோ குற்றம்சாட்டுவது நியாயமற்றது எனச் சங்கம் தெரிவித்துள்ளது. குற்றச்செயல்களில் நேரடியாகத் தொடர்புடையவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களின் செயல்களை அனைத்து ஆலயங்களுடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க வேண்டும்
பொதுநலன் சார்ந்த விவகாரங்களில் கருத்துத் தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருந்தாலும், உண்மையான தகவல்கள், ஆதாரங்கள், பொறுப்புணர்வு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கருத்துகள் முன்வைக்கப்பட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதுடன், அவற்றின் புனிதத்தன்மையையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அதே நேரத்தில், தனிநபர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இந்து சமயத்தையும் அதன் வழிபாட்டுத் தலங்களையும் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதே மலேசிய இந்து சங்கத்தின் நிலைப்பாடாகும். இந்த ஊடக அறிக்கையை மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷணம் தங்க. கணேசன் வெளியிட்டுள்ளார்.







