பெட்டாலிங் ஜெயா, 24 அக்டோபர் 2026 : கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (KLSICCI) ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.
KLSICCI-யின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கொள்கை மற்றும் வாதாடல் குழுவின் ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் ஆசியா கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் KLSICCI தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் தியாகராஜன் மற்றும் சிறப்பு உரையாளர் டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா, மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (MAICCI) துணைத் தலைவராகவும், தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (NCCIM) துணைத் தலைவராகவும் உள்ளார்.



தொழில்முனைவோருக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை எடுத்துரைக்கும் நோக்கில் நடைபெற்ற இத்திட்டத்தில், தெகுன் (TEKUN), பிஎஸ்என் (BSN), டானா உசஹாவான், ஐ-சீட் (i-SEED), ஐ-சினார் (i-SINAR) மற்றும் வாணிகம் எஸ்எம்இ உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் தங்களது வணிகங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ளவும், தொடர்புடைய நிறுவனங்களின் ஆதரவு மற்றும் சேவைகள் குறித்த தகவல்களைப் பெறவும் இந்நிகழ்ச்சி ஒரு தளமாக அமைந்தது. சுமார் 100 பேர் பங்கேற்ற இத்திட்டம், தொழில்முனைவோர் தங்களது வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராயவும், தொழில் துறையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவும் வகையில் அமைந்தது.










