ஒடிசாவை நேற்று தாக்கிய புயலில் இருந்து தாழ்வான மக்களை காப்பாற்றி, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் முன் எச்சரிக்கை பணியில் களமிறங்கிய கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம், முதல்கட்டமாக முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டது.
கேந்திரபாரா மாவட்டத்தில் கடல் மற்றும் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் சதபயா என்ற கிராமம் அமைந்துள்ளது. சற்றேறக்குறைய தீவுப் போல் காணப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களது அனைத்து தேவைகளுக்கு நாட்டுப் படகுகளில் அக்கரைக்கு சென்றுவரும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அக்கரைக்கு செல்லும் வழியில் முதலைகள் அதிகம் உள்ள ஆபத்து நிறைந்த பவுன்சகாடி சிற்றாற்றினை கடந்தே செல்ல வேண்டியுள்ளதால் இவர்களின் வாழ்க்கை நிலை ‘நித்திய கண்டம்-பூரண ஆயுசு’ என்ற முதுமொழிக்கு சரியான உவமானமாக விளங்கி வருகின்றது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கையையடுத்து, இந்த சதபயா கிராமத்தில் இருக்கும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை இயந்திரப் படகுகளின் மூலம் மீட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணியில் நேற்று சிலர் ஈடுபட்டனர். முதலைகளின் ஆபத்து நிறைந்த பவுன்சகாடி சிற்றாற்றின் வழியே வந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் படகு
கவிழ்ந்தது.
நீரில் மூழ்கிய ஒரு 9 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்தாள். இன்ன்னொரு 11 வயது சிறுமி சிற்றாற்றின் சுழலில் சிக்கி சில நொடிகளுக்குள் காணாமல் போனாள். படகில் இருந்து நீரில் கவிழ்ந்து, சிற்றாற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி, தத்தளித்துத் தவித்த கர்ப்பிணிப் பெண்கள் முதலைகளுக்கு அஞ்சி உயிர் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதனைக் கண்ட சஹாதேவ் சாமல்(40) என்பவர் சற்றும் தாமதிக்காமல் ஒருவருக்குப்பின் ஒருவராக நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 கர்ப்பிணிகளை காப்பாற்றி கரை சேர்த்தார். மேலும் சிலரை காப்பாற்ற நீந்தியபோது, நெடுநேரம் குளிர் நீரில் இருந்த காரணத்தால் மூச்சுக்குழாயில் கபம் அடைத்துக் கொள்ள, சுவாசிக்க முடியாத நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சஹாதேவ் சாமலின் மரணம் பற்றி கேள்விப்பட்டதும், அவரால் காப்பாற்றப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.