அபுதாபி, 09 மார்ச் 2026 : அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அமீரகத்தை நோக்கி ஏவப்பட்ட 9 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 109 டிரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 112 டிரோன்கள் அமீரகத்தை நோக்கி வந்ததில் 109 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
தாக்குதல் தொடங்கியதிலிருந்து மொத்தம் 205 ஏவுகணைகள் அமீரகத்தை நோக்கி வந்துள்ளன. அவற்றில் 190 ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. ஒரு ஏவுகணை அமீரக நிலப்பரப்பில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரானில் இருந்து மொத்தம் 1,184 டிரோன்கள் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டதில் 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 74 டிரோன்கள் கடலில் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமீரகத்தின் போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டை நோக்கி வந்த 8 கடல் சார்ந்த ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்தியா, அமீரகம், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 112 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து ராணுவப்படைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.





