என் தமிழ்

DBKL ஆலோசனைக்குழுவில் இந்தியர் இல்லாதது கவலைக்கிடம் – PAS தலைவர் கருத்து

கோலாலம்பூர், 09 மார்ச் 2026 : கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) 2026-ஆம் ஆண்டிற்காக 11 ஆலோசனைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. ஆனால் இந்த நியமனங்களில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறாதது கவலை அளிப்பதாக PAS விலாயத் பெர்செகுத்துவான் மாநில DHPP தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் எம். அருமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல இனங்களும் கலாச்சாரங்களும் இணைந்து உருவான நகரமாக கோலாலம்பூர் விளங்குகிறது. மலாய், சீனர், இந்தியர் உள்ளிட்ட பல இன மக்கள் இணைந்து இந்த நகரின் வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்கும் பங்களித்து வருவதாக கூறினார்.

நகராட்சி நிர்வாகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது முக்கியம். குறிப்பாக இந்திய சமூகத்தின் நலன், சமூக முன்னேற்றம் மற்றும் உள்ளூர் தேவைகள் குறித்து கருத்து தெரிவிக்க குறைந்தது ஒருவராவது ஆலோசனைக்குழுவில் இடம்பெறுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக DBKL ஆலோசனைக்குழுவில் பல இனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்று வந்தனர். ஆனால் இந்த முறை இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது பலரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோலாலம்பூரில் இந்திய சமூகத்தின் குரலும் நலன்களும் கவனிக்கப்படாமல் போய்விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது என்று அவர் கூறினார்.

எனவே, கூட்டாட்சி பிரதேச அமைச்சகம் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து, இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை DBKL ஆலோசனைக்குழுவில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமான நகரம் என்பதால், அனைத்து சமூகங்களுக்கும் தீர்மான செயல்முறைகளில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Scroll to Top