கோலாலம்பூர், 29 நவம்பர் 2026 : நேபாள–திபெத் வெள்ளப் பேரிடரில் மாயமான 54 மலேசியர்களின் நிலை குறித்து 95 நாட்கள் கடந்தும் உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள உதவிகளை விரைந்து வழங்குமாறு Malaysia Solidarity Families in Hope (MASFIH) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மாயமானவர்களின் குடும்பங்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட RM10,000 சிறப்பு நிதியுதவி இன்னும் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவில்லை என்றும், PERKESO நிதியுதவி பெறத் தகுதியுள்ள 28 குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் இன்னும் பணம் பெறவில்லை என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மாயமான அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் குறித்து தெளிவுபடுத்தவும், குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பங்களின் நீண்டகால நிதித் தேவைகளுக்கான ஆதரவை வழங்கவும் கோரியுள்ளது.
மாயமானவர்களின் ஆவணங்கள், தேசியப் பதிவுத் துறை (JPN) நடைமுறைகள் மற்றும் சட்ட, நிர்வாக உரிமைகள் குறித்து விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகளுடன் குடும்பங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்றும் MASFIH வலியுறுத்தியுள்ளது.
இதுவரை மாயமானவர்களில் எவருடைய உடல் எச்சங்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் DNA பரிசோதனை மூலம் அவர்களின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அமைப்பு, டிசம்பர் 4ஆம் தேதி 100 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பாக நிலுவையில் உள்ள விவகாரங்களில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.







