என் தமிழ்

சரவாக் தேர்தல் பிரசாரத்தில் 3R விவகாரங்களைத் தவிர்க்க வேண்டும் : மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தல்

செகாமட், 29 நவம்பர் 2026 : சரவாக் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் இன, மதம் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பான (3R) விவகாரங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

பல இன மக்கள் வாழும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தாமல், தேர்தல் பிரசாரங்கள் முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். போட்டியிடும் தொகுதிகளில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அரசியல் தலைவர்கள் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இனம், சமூகப் பிரிவுகள், பாரம்பரியங்கள் மற்றும் மலேசிய ஒப்பந்தம் 1963 (MA63) தொடர்பான விவகாரங்களை அரசியல் சர்ச்சைகளாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கல்வி, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியே தேர்தல் பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

செகாமட்டில் உள்ள பத்து அனாம் தேசியப் பள்ளியில் (SK Batu Anam) நடைபெற்ற MADANI ஆதரவுப் பள்ளித் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். வாக்காளர்கள் தங்களின் நலன்களையும் குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Scroll to Top