என் தமிழ்

தபிகா பெர்பாடுவான் மாணவர்களின் வாசிப்புத் திறன் 100 விழுக்காட்டை நெருங்குகிறது : யுனேஸ்வரன் ராமராஜ்

செகாமட், 29 நவம்பர் 2026 : நாடு முழுவதும் உள்ள தபிகா பெர்பாடுவான் (Tabika Perpaduan) மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதுடன், அது கிட்டத்தட்ட 100 விழுக்காட்டை எட்டியுள்ளதாக தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

தாம் மேற்கொண்ட களப் பயணங்களின்போது சந்தித்த பெரும்பாலான மாணவர்கள் எழுத்துகளை அடையாளம் காண்பது, எழுத்துகளை வாசிப்பது மற்றும் எண்களை அறிந்துகொள்வது போன்ற அடிப்படைத் திறன்களைப் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

மூன்று முதல் ஒன்பது வயது வரையிலான காலகட்டம் குழந்தைகளின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது என்றும், அக்காலத்தில் அவர்கள் கற்பிக்கப்படும் அறிவை எளிதில் உள்வாங்கி புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செகாமட், பத்து அனாம் தேசியப் பள்ளியில் (SK Batu Anam) நடைபெற்ற MADANI ஆதரவுப் பள்ளித் திட்டம் மற்றும் ஜொகூர் மாநில குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பக் கல்வியைச் சிறப்பாக வழங்குவதில் தபிகா பெர்பாடுவான் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

2025ஆம் ஆண்டில் ஆறு வயது மாணவர்களின் வாசிப்புத் திறன் 82 விழுக்காடாகப் பதிவாகியிருந்ததுடன், நாடு முழுவதும் 1,781 தபிகா பெர்பாடுவான் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Scroll to Top