என் தமிழ்

சிலாங்கூர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2026 : தட் பெங்குலு சிலாங்கூரின் பாரம்பரிய உணவாக அறிவிப்பு

கோலா குபு பாரு, 29 நவம்பர் 2026 : சிலாங்கூர் பாரம்பரிய உணவுத் திருவிழா 2026, ஐந்தாவது ஆண்டாக கோலா குபு பாருவில் உள்ள டத்தாரான் வாரிசான் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவைத் தொடக்கி வைத்த மாநில முதலமைச்சர் அமிருடின் ஷாரி, தட் பெங்குலு (Tat Bengkulu) உணவை சிலாங்கூரின் பாரம்பரிய உணவாக அறிவித்தார்.

பெங்குலு வம்சாவளி சமூகத்தின் பாரம்பரிய உணவான தட் பெங்குலு, குறிப்பாக ஹுலு சிலாங்கூர், சுங்கை சோ, செரெண்டா, ராவாங் மற்றும் சுங்கை செலிசெக் பகுதிகளில் பிரபலமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் அரச குடும்பத்தினருக்கும் உயர்குடியினருக்கும் பரிமாறப்பட்ட உணவாக இது கருதப்பட்டதால், ‘அரசர்களின் சிற்றுண்டி’ என்றும் அழைக்கப்பட்டது.

சிலாங்கூரின் 2009ஆம் ஆண்டு மலாய் மரபுகள் மற்றும் பாரம்பரியக் கழகச் சட்டத்தின் கீழ் தட் பெங்குலு வரலாற்றுப் பாரம்பரியப் பொருளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு நாசி அம்பேங், 2025ஆம் ஆண்டு காஜாங் சாத்தே ஆகிய உணவுகளும் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளாக அங்கீகரிக்கப்பட்டன.

இவ்வாண்டு விழாவில், ஒரே நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான தட் பெங்குலு விநியோகித்ததற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. ஆறு உள்ளூர் தயாரிப்பாளர்களால் 2,500 தொகுப்புகளில் மொத்தம் 12,500 தட் பெங்குலு தயாரித்து விநியோகிக்கப்பட்டன. மேலும், சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 24 வகையான பாரம்பரிய உணவுகள், 12 வகையான கஞ்சி மற்றும் இனிப்பு உணவுகள் உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் பாரம்பரிய உணவுத் தயாரிப்புகளை மேம்படுத்துவதுடன், இளம் தலைமுறையினரும் இத்தகைய மரபுகளைத் தொடர்ந்து பேண ஊக்குவிக்கப்படுவார்கள் என அமிருடின் தெரிவித்தார்.

Scroll to Top