செகாமட், 24 நவம்பர் 2026 : செகாமட் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி பத்து அனாம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளிக் கொண்டாட்டத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தீபாவளியைக் கொண்டாடி, மலேசியாவின் பன்முகக் கலாச்சார ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தொடக்கம் முதல் இறுதிவரை உழைத்த செகாமட் நாடாளுமன்ற அலுவலகப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மடானி பத்து அனாம் சமூகத்தினருக்கு யுனேஸ்வரன் ராமராஜ் நன்றி தெரிவித்தார்.



மேலும், ஜோகூர் மாநில தேசிய ஒருமைப்பாட்டுத் துறை (JPNIN), செகாமட் மாவட்டத் தகவல் துறை, உள்ளூர் தலைவர்கள், அரசுத் துறைத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், சீருடைப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களின் வருகைக்கும் அவர் நன்றி கூறினார்.
காஷ்மீர் ஸ்டோன், ஹேவாக் பிரதர்ஸ், மன்மதா இசைக்குழு, ஆர்.ஜே. அஷ்வின்னி மற்றும் தஞ்சை கமலா இந்திரா நடனப் பள்ளி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன. பத்து அனாம் தமிழ்ப்பள்ளியின் சிறுவர் நடனக் கலைஞர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த செகாமட் மக்கள் ஒன்றுகூடி, தங்களது கலாச்சாரங்களின் அழகைப் பகிர்ந்து கொண்டது இவ்விழாவின் சிறப்பம்சமாக அமைந்ததாக யுனேஸ்வரன் ராமராஜ் குறிப்பிட்டார்.










