கோலாலம்பூர், 24 நவம்பர் 2026 : மலேசியாவை வட்டார அளவிலான விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு (MRO) மையமாக உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து தேசிய முதலீட்டுக் குழு (MPN) கூட்டத்தில் ஆராயப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் மலேசியாவின் MRO துறை RM13 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதாகவும், இது நாட்டின் மொத்த விண்வெளித் துறை உற்பத்தி மதிப்பில் 40 விழுக்காடு என்றும் அவர் குறிப்பிட்டார். இத்துறையில் சுமார் 12,000 திறன்மிக்க பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முதலீட்டாளர்களின் நடவடிக்கைகளுக்கு வசதியாகவும், திட்டமிடப்பட்ட முதலீடுகள் விரைவாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அரசுத் துறைகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார். இதற்காக MRO துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஊக்கச் சலுகைகளை மேம்படுத்துவதுடன், வர்த்தக நடைமுறைகளையும் எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும், கெரியான் ஒருங்கிணைந்த பசுமைத் தொழில்துறைப் பூங்கா (KIGIP) திட்டத்தின் செயலாக்க முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும் செயலாக்க நடைமுறைகளைச் சீரமைப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என அன்வார் தெரிவித்தார்.







