செகாமட், 24 நவம்பர் 2026 : ஜெமந்தா பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தில் மிளகாய் சாகுபடி செய்து வரும் ஜெகன் குணசேகரனின் விவசாய முயற்சிக்கு செகாமட் நாடாளுமன்ற அலுவலகம் நிதியுதவி வழங்கியுள்ளது.
ஜெமந்தா சாலையில் அமைந்துள்ள அவரது மிளகாய்த் தோட்டத்தைப் பார்வையிட்ட யுனேஸ்வரன் ராமராஜ், பெரும்பாலான செடிகளில் பச்சை மிளகாய்கள் காய்த்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார். இன்னும் மூன்று வாரங்களில் அறுவடை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள், புல்வெட்டும் இயந்திரங்கள் மற்றும் கூடாரம் வாங்குவதற்கான கூடுதல் முதலீட்டுச் செலவுக்கு நாடாளுமன்ற அலுவலகம் நிதியுதவி அளித்துள்ளது. மேலும், மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (MITRA) மற்றும் விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) ஆகியவற்றின் உதவிகளைப் பெறுவதற்கான ஆதரவுக் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய விவசாயத் தொழில்முனைவோருக்கு பயிற்சி, வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வரும் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (MARDI) உள்ளிட்ட அரசுத் துறைகளின் பங்களிப்பையும் யுனேஸ்வரன் பாராட்டினார்.
உள்ளூர் இளைஞர்கள் விவசாயத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜெகனின் அறுவடை நல்ல வருமானத்தைத் தருவதுடன், செகாமட்டில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் விவசாயத்தில் ஈடுபட ஊக்கமாக அமைய வேண்டும் என வாழ்த்தினார்.







