என் தமிழ்

2027 மதானி வரவு செலவுத் திட்டம் : சிறு வணிகர்களுக்கு RM1.7 பில்லியன் நிதி

கோலாலம்பூர், 24 நவம்பர் 2026 : 2027ஆம் ஆண்டுக்கான மடானி வரவு செலவுத் திட்டத்தில், உள்ளூர் தொழில்முனைவோர், சிறு வணிகர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் (PMKS) வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஜுவாலான் ரஹ்மா மடானி மற்றும் ஜுவாலான் அக்ரோ மடானி விற்பனைத் திட்டங்களுக்கு RM750 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெறுவதுடன், உள்ளூர் வணிகர்களுக்கும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.

மேலும், நாடு முழுவதும் 35,000 விற்பனை நிகழ்ச்சிகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் வணிகர்களின் விற்பனை வாய்ப்புகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வணிகர்களின் முதலீடு மற்றும் தொழில் விரிவாக்கத்துக்கு உதவும் வகையில், பிஎஸ்என் வங்கியின் மூலம் RM1.7 பில்லியன் மதிப்பிலான குறுநிதி உதவி வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் இளைஞர்கள், கிக் துறைப் பணியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களையும் உள்ளடக்கியுள்ளது.

அதேவேளையில், முதல் முறையாக ஹலால் சான்றிதழ் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு RM5,000 வரை இணை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் நிறுவனங்கள் தரநிலைகளைப் பூர்த்தி செய்து, தங்களது பொருட்களைப் பெரிய சந்தைகளில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளைப் பெற முடியும்.

இந்த முயற்சிகள் உள்ளூர் தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வருமானத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top