கோலாலம்பூர், 22 நவம்பர் 2026 : மலேசியத் திரைப்படத்துறையில் மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சுஹான் பஞ்சாச்சரத்திற்கு, 35ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் (FFM35) ‘அனுகெரா காஸ் கற்யாவான்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
‘பாஞ்சா’ என்று அழைக்கப்படும் இவர், 1991ஆம் ஆண்டு வெளியான ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படத்தின் மூலம் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கினார். அப்படத்தில் ராஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மலாய், தமிழ், ஆங்கிலம் மற்றும் கான்டோனீஸ் மொழிகளில் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் திரைப்படங்கள் மற்றும் தொடர்களைத் தயாரித்துள்ளார்.
‘Sayang’, ‘Debu Debu Kasih’, ‘Suami Isteri Dan…’ உள்ளிட்ட மலாய் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ள சுஹான், 2024ஆம் ஆண்டு வெளியான ‘MR & MRS’ மலேசியத் தமிழ்த் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்புத் துறையில் அவர் ஆற்றிய பணிக்காக 2010ஆம் ஆண்டு GOPIO சர்வதேச அமைப்பின் ‘International Renown Entrepreneur Excellence Award’ விருதைப் பெற்றார். தற்போது FFM35 வழங்கியுள்ள ‘அனுகெரா காஸ் கற்யாவான்’ விருது, மலேசியத் திரையுலகில் அவரது நீண்டகாலப் பயணத்தையும் கலைத்துறைப் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.







