கோலாலம்பூர், 23 நவம்பர் 2026 : ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் மான் வீ சோங் – தீ காய் வுன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று, 27 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்த ஜோடி இந்தோனேசியாவின் லியோ ரொல்லி கர்னாண்டோ – டேனியல் மார்தின் ஜோடியை 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது. 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு சியா சூன் கிட் – யாப் கிம் ஹோக் ஜோடியே ஹாங்காங் ஓபன் ஆடவர் இரட்டையர் பட்டத்தை மலேசியாவுக்குப் பெற்றுத் தந்திருந்தது. தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வெற்றியை வீ சோங் – காய் வுன் ஜோடி மீண்டும் மலேசியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.
கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்ற இந்த ஜோடி, ஹாங்காங் ஓபன் வெற்றியின் மூலம் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. மேலும், உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) உலகச் சுற்றுப் போட்டிகளில் தனது எட்டாவது பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற மலேசிய ஜோடிக்கு 39,500 அமெரிக்க டாலர் (சுமார் RM162,500) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தோனேசிய ஜோடிக்கு 19,000 அமெரிக்க டாலர் பரிசாகக் கிடைத்தது.







