என் தமிழ்

லாவோஸ் துணைப் பிரதமர் மலேசியா வருகை : அன்வாருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

புத்ராஜெயா, 22 நவம்பர் 2026 : மலேசியா – லாவோஸ் இடையிலான தூதரக உறவுகளின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி, லாவோஸ் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான தோங்சவான் பொம்விஹானே நவம்பர் 22 முதல் 24ஆம் தேதி வரை மலேசியாவில் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கும் அவர், மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா முகமட் ஹசனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார். இச்சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதிகள், தொழில்துறை, டிஜிட்டல் பொருளாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்ட ஒத்துழைப்புத் துறைகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படும்.

மேலும், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களின் கீழ் இயங்கும் தூதரகப் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே பயிற்சி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவுள்ளது.

2025ஆம் ஆண்டில் மலேசியா – லாவோஸ் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 157.8 விழுக்காடு அதிகரித்து RM258.4 மில்லியனை எட்டியது. இதில் லாவோஸுக்கான மலேசிய ஏற்றுமதி RM77.7 மில்லியனாகவும், அந்நாட்டிலிருந்து மலேசியா மேற்கொண்ட இறக்குமதி RM180.7 மில்லியனாகவும் பதிவானது.

மேலும், 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 28.7 விழுக்காடு உயர்ந்து RM225.3 மில்லியனை எட்டியுள்ளது. லாவோஸின் சம்பாசாக் பகுதியில் அமைந்துள்ள 260 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட நீர்மின் திட்டமும் மலேசியாவின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இது அந்நாட்டின் மிகப்பெரிய தூய்மையான எரிசக்தி முதலீடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Scroll to Top