என் தமிழ்

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அன்வார் சந்திப்பு : இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி

கோலாலம்பூர், 22 நவம்பர் 2026 : சீனாவுடனான மலேசியாவின் வியூக உறவுகளை வெளிநாட்டுத் தரப்புகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து வலுப்படுத்தப் போவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சநாட்டுத் தலைவர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, ஷென்செனுக்கான அதிகாரத்துவப் பயணத்தின் நிறைவாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக அரசியல் சூழல் மற்றும் சர்வதேச ஒழுங்கை வடிவமைப்பதில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தலைமைத்துவம் முக்கியப் பங்காற்றி வருவதாக அன்வார் பாராட்டினார். குறிப்பாக, வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வழிநடத்துவதிலும், வளரும் நாடுகளின் நலன்களை முன்னிறுத்துவதிலும் அவரது அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

மேலும், APEC 2026 மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்த சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அந்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு, நிர்வாகத் திறன் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைப் பாராட்டினார்.

பொருளாதார வலிமை அல்லது புவிசார் அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நாடுகளுக்கும் சமமான மரியாதையும் நியாயமான அணுகுமுறையும் வழங்கும் சீனாவின் கொள்கை, நீதியான சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் இரு நாடுகளின் பொதுவான நலன்களின் அடிப்படையில் சீனாவுடனான உறவை மலேசியா தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், இதன் மூலம் இரு நாடுகளின் வளமும் பிராந்தியத்தின் நலனும் மேம்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

Scroll to Top